தேசம்

`வலி எடுக்கும் போதெல்லாம், மயக்க ஊசி போட்டார்கள்’: கால்பந்து வீராங்கனை பிரியாவின் தாய் கதறல்

காமதேனு

பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வலியால் துடித்த போது சரியான சிகிச்சை அளிக்காமல் தொடர்ந்து மயக்க ஊசி போட்டு வந்ததாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா(17). இவர் கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த பிரியா, அங்குக் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகப் பிரியா சேர்க்கப்பட்டார். அவருக்குத் தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வலி குறையாத காரணத்தினால் மீண்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சேர்க்கப்பட்டார். அப்போது, காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அவரின் கால்கள் அகற்றப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரியா உயிரிழந்தார். இதில் தொடர்புடைய மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரியாவின் மரணம் குறித்த தகவல் அறிந்த அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தாய், “பெரியார் நகர் மருத்துவமனையில் திங்கட்கிழமை பிரியாவுக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அன்றைக்கு இரவிலிருந்தே அவளுக்குக் காலில் வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதாள். அப்போது வலி தெரியாமல் இருக்க மயக்க ஊசி போட்டார்கள். இதனால் அவள் தூங்கிவிட்டாள். இப்படியே மூன்று முறை ஊசி போட்டார்கள். மறுநாள் செவ்வாய்க் கிழமையும் இதேபோல் தொடர்ந்து வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டார்கள். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, சீனியர் டாக்டர் வந்து பார்க்கட்டும் பிறகு என்ன செய்யலாம் எனச் சொல்கிறோம் எனச் சொன்னார்கள். சீனியர் டாக்டர் வந்து பார்த்த உடனே, ஸ்கேன் எடுக்கச் சொன்னார்கள். அதன் பிறகு உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த வலிக்கு இங்கே மருந்து இல்லை என்றார். அந்த மருத்துவமனையில் ஆபரேஷன் செய்வதற்கு மருந்து இருக்கிறது. சிகிச்சை அளிக்க மருந்து இல்லையா? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தான சூழல் இருப்பதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து கால்களை அகற்றினார்கள். பெரியார் நகர் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரியா உயிரிழந்து விட்டார்” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT