தேசம்

பூந்தமல்லி: குப்பை வண்டியில் சென்ற இலவச வேட்டி, சேலை; வெளியான அதிர்ச்சி வீடியோ

காமதேனு

குப்பை அள்ளும் வாகனத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை நியாயவிலைக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்றையும் பொது மக்களுக்கு வழங்க இருக்கிறது தமிழக அரசு. அதோடு, இலவச வேட்டி, சேலையும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட இருக்கிறது. இதையடுத்து, ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை கொண்டு செல்லும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச வேட்டி, சேலைகள் அங்கிருக்கும் குப்பை வண்டிகளில் ஏற்றி செல்லப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பூந்தமல்லி வட்டாட்சியர் செல்வம், இலவச வேட்டி, சேலை கொண்டு செல்லும் வாகனம் குப்பை வண்டி என்று எனக்கு தெரியாது என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

மக்களுக்கு அரசால் கொடுக்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

SCROLL FOR NEXT