தேசம்

காவல் நிலையம், வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: கொரட்டூர், ஆவடியில் அவலம்

காமதேனு

தொடர் மழை காரணமாக கொரட்டூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவடியில் காவல் நிலையத்தில் மழை நீர் சென்றதால் காவல்துறையினர் பணி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் கடந்த 5 நாட்களாக வடகிழக்கு பருவமுறை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு மழை நீரை அகற்றி வருகின்றன. ஒரு சில இடங்களில் சாலைகளிலும் மழைநீர் தேங்கி இருந்தாலும் மற்ற இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் சென்னை கொரட்டூரில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பத்தூர், கள்ளிகுப்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இந்த வீடு அமைந்துள்ளதால் மழை நீர் புகுந்துள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் மழை நீரை வெளியேற்றும் பணியில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே ஆவடி காவல் நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளதால் காவல்துறையினர் பணி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு அமைச்சர் சா.மு.நாசர் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் இனி தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஒரு சில இடங்களில் மழை நீரை தேங்காமல் நின்றாலும் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. திருவேற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

SCROLL FOR NEXT