தேசம்

‘இயற்கை விவசாயம் என்பது அன்னை பூமிக்குச் செய்யும் சேவை’ - பிரதமர் மோடி பேச்சு

காமதேனு

குஜராத்தின் சூரத் நகரில், இயற்கை வேளாண்மை மாநாடு இன்று காலை தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்ற இந்த மாநாட்டில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சாரியா தேவவிரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுவது எதிர்காலத்தில் பரவலான வெற்றியைத் தரும் என்று கூறினார்.

“இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுவது இயற்கை அன்னைக்குச் சேவை செய்வதைப் போன்றது” என்று கூறிய மோடி, கிராமங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவது எளிதல்ல என்று பேசுபவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியின் மூலம் தேசம் பதிலளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

“டிஜிட்டல் இந்தியா போல் இயற்கை விவசாயத்துக்கான மக்கள் இயக்கமும் வரும் ஆண்டுகளில் பரவலான வெற்றியைப் பெறும். விவசாயிகள் எத்தனை சீக்கிரம் இதில் இணைகிறார்களோ அத்தனை விரைவில் பலன்களை அறுவடை செய்வார்கள்” என்று கூறிய மோடி, இயற்கை விவசாயம் செய்வதன் மூலம், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் சேவையாற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக கடந்த மார்ச் மாதம் நடந்த குஜராத் பஞ்சாயத் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 75 விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அம்மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலிருந்தும் 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் பலனாக, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 41,000 விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றிவருகின்றனர். இன்று நடந்த மாநாட்டில் அந்த விவசாயிகளும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT