தேசம்

ஆண்மை பரிசோதனையில் மூன்றாம் முறையாக தோல்வி; பலாத்கார புகாரில் கைதானவர் ஜாமீன் வழக்கில் வெற்றி!

காமதேனு

தொடர்ந்து மூன்று முறை நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனைகளிலும் தோல்வியுற்றதால், பலாத்கார வழக்கில் கைதான நபர், தனது ஜாமீன் கோரும் வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார்.

குஜராத்தை சேர்ந்த பிரபல புகைப்படக்காரர் பிரசாந்த் தனக். 50 வயதை கடந்த இவரின் பிரதான பணி, மாடல் துறை பெண்களை புகைப்படம் எடுப்பது. அண்மையில் வளரும் பெண் மாடல் ஒருவர், பிரசாந்த் மீது பாலியல் பலாத்கார புகார் எழுப்பினார். மாடல் ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதாக வாக்களித்து தன்னை ஹோட்டல் அறையில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்ததாக 27 வயதாகும் அந்த மாடல் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் சுமார் ஓராண்டாக சட்டப் போராட்டம் நடத்தும் பிரசாந்த், அதன் முதல் கட்டமாக ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். கீழ்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரிக்கவே, அதற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றம் சென்றார். அங்கே பிரசாந்துக்கு ஆண்மை பரிசோதனைக்கு உத்தரவானது. முதல் சோதனையில் பிரசாந்தின் ஆண்மை மருத்துவ முறையில் நிரூபணம் ஆகவில்லை.

ஆனால், புகார் எழுப்பிய பெண் தரப்பில் ’பிரசாந்த் ஆண்மை உள்ளவர் என்றும், மருத்துவ உபகரணங்களை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்’ என்றும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனையடுத்து மற்றுமொரு முறை ஆண்மை பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிலும் மருத்துவர்கள் உதடு பிதுக்கினர். ஆனால், புகாரளித்த மாடல் தரப்பில் விடுவதாயில்லை. இன்னும் ஒரு முறை சோதனை செய்து விடுங்கள் என்று கோரினார்கள்.

அப்படியே உத்தரவானது. இம்முறை பிரசாந்தின் வழக்கறிஞர் மருத்துவ ஆதாரங்களை விரிவாக நீதிமன்றத்தில் சமர்பித்தார். ’வைப்ரேட்டர் சாதனங்களை கைக்கொண்டு, அல்ட்ரோ சவுண்ட் ஸ்கேனர்களின் மேற்பார்வையில் மருத்துவர்கள் மேற்கண்ட 3 ஆண்மை பரிசோதனையிலும் பிரசாந்துக்கு விரைப்போ, விந்து வெளியேற்றமோ இல்லை. இதற்கு மேலும், ஆண்மையற்ற ஒரு நபரை இம்சிப்பது முறையல்ல. எனவே பிரசாந்தின் ஜாமீன் கோரிக்கைக்கு உரிய தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ’ஆண்மை இழந்த காரணத்தினால் திருமணம் செய்யாது இருக்கிறேன்’ என்று பிரசாந்தும் உருக்கமாக தெரிவித்தார். ஆனால் புகாரளித்த மாடல், ’பிரசாந்த் ஒரு பிளே பாய்; ஏதோ நாடகம் போடுகிறார்’ என்று முறையிட்டுப் பார்த்தார்.

கடைசியில் முகாந்திர அடிப்படையில், கீழ்மை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்து, பிரசாந்துக்கு ஜாமீன் வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த ஜாமீன் உத்தரவு மற்றும் அதன் மருத்துவ ஆதாரமான ஆண்மை பரிசோதனை ஆகியவற்றை வைத்தே பிரசாந்துக்கு சாதகமாக வழக்கின் மேல் விசாரணை இனி அமையும் என்கிறார்கள்.

புகாரளித்த மாடல் தரப்போ, பிரசாந்த் திறமையாக நாடகமாடுகிறார் என்று தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார். வழக்கின் போக்கு அடுத்து எந்த திசையில் செல்லும், அதன் தீர்ப்பு இதர பலாத்கார வழக்குகளில் எம்மாதிரியான பாதிப்பை என்றெல்லாம் நீதித்துறையை சார்ந்தோர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT