தேசம்

பரங்கிமலை ரயில் நிலையம், மாணவியின் வீட்டில் அதிரடி ஆய்வு: கொலை வழக்கில் களமிறங்கியது சிபிசிஐடி போலீஸ்

காமதேனு

கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த ரயில் நிலையம் மற்றும் மாணவியின் வீடு அமைந்துள்ள ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சிபிசிஐடி போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் தனியார் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே சத்யா குடும்பத்தினர் மூன்று முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் சமரசம் பேசிவிட்டு அனுப்பியதே இரு உயிரிழப்பிற்கு காரணம் என சத்யா குடும்பத்தினர் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு மாணவி சத்யா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை தொடங்கினர். டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீஸார் சம்பவம் நடைபெற்ற பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் மாணவியின் வீடு அமைந்துள்ள ஆலந்தூர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்தி வந்த ரயில்வே போலீஸாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களைப் பெற்று பின் மாணவியின் குடும்பத்தாரிடமும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர். வழக்கு தொடர்பாக விசாரிக்க டி.எஸ்.பி செல்வகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரியாக பெண் ஆய்வாளர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT