தேசம்

இந்த 5 பேரும் 6 மாதம் பாஞ்சாங்குளம் ஊருக்குள் வரக்கூடாது: கோர்ட் அதிரடி

காமதேனு

தென்காசி மாவட்டம், பாஞ்சாக்குளத்தில் பட்டியல் இன குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் வைரலானது. அதன்மூலம் தீண்டாமைப் பிரச்சினையும் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5 பேரும், 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடைவிதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசு பள்ளி ஒன்று உள்ளது. இதற்கு பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. அங்கு குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே பள்ளிக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதில், அந்தக் கடைக்காரர் குழந்தைகளிடம், “இனிமேல் நீங்கள் யாரும் இங்குவந்து தின்பண்டம் எதுவும் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளூர் கடையில் வாங்கக்கூடாது. நீங்கள் போங்க ”எனக் குழந்தைகளிடம் சொல்கிறார். கூடவே, “ இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். இனி உங்களுக்கு பொருள்கள் கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” எனச் சொல்கிறார் கடைக்காரர்.

உடனே, கட்டுப்பாடா? என அந்தக் குழந்தைகள் ஆச்சரியத்தோடு, என்னக் கட்டுப்பாடு என்கிறார்கள். உடனே, ‘கட்டுப்பாடுன்னா.. ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்கு. உங்கத் தெருவுல உள்ளவங்களுக்கு பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” எனக் கூலாகச் சொல்லி குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார். இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஏக்கத்துடன் செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இவ்விவகாரத்தில் கடை உரிமையாளரும், பாஞ்சாங்குளம் நாட்டாண்மையுமான மகேஷ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரச்சினைக்குரிய அந்தக் கடையும் சீல் வைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் 5 பேரும் பாஞ்சாங்குளம் ஊருக்குள் வர 6 மாதங்களுக்கு ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு திருநெல்வேலி தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பத்மநாபன், வழக்கு பாய்ந்துள்ள 5 பேரும், 6 மாதங்கள் பாஞ்சாங்குளம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT