தேசம்

சமூக வலைதளங்களின் நடவடிக்கைகள் குறித்த புகார்கள்: விரைவில் விசாரணைக் குழுக்கள்

காமதேனு

சமூக வலைதளங்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்பாக, பயனாளர்கள் முன்வைக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் சர்ச்சைக்குரிய பதிவுகளைக் கையாள்வதில் கவனம் செலுத்துகின்றன. போலியான தகவல்கள், வெறுப்புக் கருத்துகள் அடங்கிய பதிவுகள் நீக்கப்படுவது, பயனாளர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படுவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாகப் பயனாளர்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி பெறும் வகையில் குழுக்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, மூன்று நபர்கள் கொண்ட மேல்முறையீட்டுக் குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

வன்முறையைத் தூண்டும் வகையிலான மத ரீதியான ஆட்சேபத்துக்குரிய கருத்துகள், ஆபாசமான பதிவுகள், போலிச் செய்திகள் போன்றவை நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பவை என்று கூறியிருக்கும் மத்திய அரசு இதுபோன்ற கருத்துகள் வெளியானால் அதுகுறித்து சமூக வலைதளங்களுக்குப் பயனாளர்கள் தகவல் தெரிவிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறது.

அதேபோல், இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் எடுக்கு முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீட்டுக் குழுக்களில் பயனாளர்கள் புகார் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT