தேசம்

இரவோடு இரவாக நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணி: அதிகாலையில் அதிர்ச்சியடையும் மக்கள்!

காமதேனு

வேலூரில் முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலைப்பணியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இப்பணி நடைபெற்ற காளிகாம்பாள் கோயில் தெருவைச் சேர்ந்த சிவா, தனது டூவீலரை கடை முன்பு நிறுத்தி விட்டுச் சென்றார். இன்று காலையில் அவர் வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவர் டூவீலரையும் சேர்த்து சாலை அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து சிவா அதிர்ச்சியடைந்தார். அவர் வாகனத்தை எடுக்க முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை. பிறகு சிமென்ட்டை உடைத்து தனது வாகனத்தை அவர் மீட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக சாலை அமைத்துள்ளனர். அப்போது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர். தெருவில் உள்ள குப்பை உள்ளிட்ட எதையும் அகற்றாமல் அதன் மீதும் சாலை போட்டுள்ளனர். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. எனவே, இப்பணிகளை அதிகாரிகள் கண்காணிப்பதுடன், தரமாக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT