தேசம்

என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

காமதேனு

நெய்வேலியில் உள்ள என்எல்சி விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அளவீட்டுப் பணிகளுக்கு வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள கரிவெட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை கையகப்படுத்த அந்நிறுவனம் தொடர் முயற்சிகளை எடுத்துவருகிறது. ஆனால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட கோட்டாட்சியர் பூவராகவன் தலைமையில் ஏராளமான வருவாய்த்துறை அதிகாரிகள், காவலர்களுடன் நில அளவீட்டுப் பணிக்கு வந்தனர்.

ஆனால் அவர்களை அளவைப் பணி செய்ய விடாமல் கரிவெட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம், மாற்று இடத்தில் பத்து செண்ட் ஆகியவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் ஏக்கருக்கு 25 லட்சம் மட்டுமே இழப்பீடாகத் தரமுடியும் என தெரிவித்தனர். மேலும் மாற்று இடம், அரசுப்பணி உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இதனால் மக்கள் அதிகாரிகளை நில அளவைப்பணியை மேற்கொள்ள விடவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT