தேசம்

கண்காணித்த போலீஸ்; கையும் களவுமாக சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்: ஒரு லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

காமதேனு

ராமநாதபுரத்தில் ஒரு லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஊர்க்காவல் படை வீரரை குற்றத்தடுப்பு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (28). ஊர்க்காவல் படை வீரரான இவர், மெரைன் போலீஸாருடன் இணைந்து கடலோர ரோந்து பணியில் கடந்த 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். இவர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் ராஜேஸ்வரனின் நடவடிக்கைகளை திருப்பாலைக்குடி குற்றத்தடுப்பு பிரிவினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கள்ள நோட்டுகளுடன் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அ.மணக்குடி பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு தேடிச்சென்ற போலீஸாரிடம் ராஜேஸ்வரன் சிக்கவில்லை. இதன்பின்னர், ராமநாதபுரத்தில் நடமாடுவதாக கிடைத்த தகவல் படி, விரைந்து வந்த போலீஸார் தேவிபட்டினம் சாலையில் நின்ற ராஜேஸ்வரனை பிடித்தனர்.

அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனடிப்படையில் ராஜேஸ்வரனை கைது செய்த போலீஸார் இவருக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்த கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT