தேசம்

கார் சிலிண்டர் வெடித்து உடல் கருகி ஒருவர் பலி: கோவை விரைகிறார் டிஜிபி சைலேந்திரபாபு

காமதேனு

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு விசாரணை நடத்த தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனையடுத்து அருகே இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைப் போராடி அணைத்தனர்.

இதனையடுத்து காரில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போது ஒருவர் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார் வெடித்தது தொடர்பாக கோவை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரி இருந்தது. இது தொடர்பாக பிரபாகரன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த காரை மூன்றாண்டுகளுக்கு முன் விற்று விட்டதாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். காரில் இறந்தவர் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்போது போலீஸார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதலா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால் அது குறித்து விசாரிக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சென்னையில் இருந்து கோவைக்கு விரைந்துள்ளார். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT