தேசம்

சீனாவை மீண்டும் மிரட்டும் ஒமிக்ரான்: இந்தியாவிலும் கரோனா பரவும் பதற்றம்

காமதேனு

சீனா உட்பட 5 நாடுகளில் கரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் அதன் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

சீனாவில் கரோனா எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மயானம் ஒன்றில் தினமும் 200 உடல்கள் தகனம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த மயானங்களில் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது பரவி வரும் கரோனா தொற்றால் சீனாவில் 10 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமைச்சர் மன்சுக் மாண்டவியா

இதன் காரணமாக சீனாவில் இருந்து இந்த வைரஸ் இந்தியாவிற்கு வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. கரோனா பரவல் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு கலந்தாலோசனை கூட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூட்டியிருக்கிறார். கரோனா தொற்றைக் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மரபணு மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை அதிகரிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மரபணு பிறழ்வுகளைக் கண்டறிவதன் மூலம் அவற்றின் பரவலைக் கண்டறிந்து, கரோனா வைரஸின் புதிய மாறுபாடுகளை அடையாளம் காணவும், அதனால் பாதித்த அனைவருக்கும் ஏற்பட்டுள்ள கரோனா வகை தொடர்பான மரபணு வரிசைமுறையை பதிவு செய்யவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கரோனா மரணம் தொடங்குவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 3490 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT