ஊரணி
ஊரணி 
தேசம்

சிறுவன் பலியான ஊரணியில் செத்து மிதந்த மீன்கள்: விஷம் கலக்கப்பட்டதா?

காமதேனு

இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த நிலையில், இன்று அதே ஊரணியில் மீன்கள் உயிரற்று மிதந்ததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரற்று மிதந்த மீன்கள்

மதுரை மாநகர் உத்தங்குடி பகுதியில் உள்ள பழைமையான ஊரணியில் கடந்த 23-ம் தேதி கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இந்த ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த போது உயிரிழந்தான். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இந்த ஊரணியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் மர்மமான முறையில் உயிரற்று மிதந்தன. இது குறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த தகவலின் பேரில் ஊரணியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தண்ணீரை சோதனை செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர்

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர், மீன் வளத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஊரணியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஊரணியில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

மீன்கள் இறப்புக்கு என்ன காரணம்? தண்ணீரில் ஏதும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது விஷம் ஏதும் கலக்கப்பட்டுள்ளதா என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மீன்கள் இறப்புக்கும், சிறுவனின் உயிரிழப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இருப்பினும், உடற்கூறு ஆய்வு முடிவு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினரின் ஆய்வு முடிவுகள் ஆகியவற்றை கொண்டு தான் எதையும் உறுதியாகக் கூற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT