ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து 
தேசம்

மேலும் ஒரு சிறப்பு ரயில்; ஒடிசாவில் இருந்து சென்னைக்கு இன்று நண்பகல் புறப்படுகிறது!

காமதேனு

நேற்று முன்தினம் கோர ரயில் விபத்து நடந்த ஒடிசாவில் இருந்து, மேலும் ஒரு சிறப்பு ரயில் சென்னைக்கு புறப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை 3 ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து நடந்தது. இந்த ரயில் விபத்தில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 294 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய, ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான பயணிகள் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியதால், இதில் பயணித்த மற்றும் காயமடைந்த பயணிகளை, சென்னைக்கு அழைத்து வர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் முதலில் 290 பேரும், பின்னர் 130 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் பத்ரக் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இன்று நண்பகல் 1 மணிக்கு அங்கிருந்து புறப்படும் எனவும், வழியில் கட்டாக் மற்றும் புவனேஸ்வர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT