ரூபாய்
ரூபாய் யூடியூப் வீடியோக்களை பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்த நபரை கைது செய்தது போலீஸ்
தேசம்

யூடியூப் வீடியோக்களை பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்த நபரை கைது செய்தது போலீஸ்

காமதேனு

யூடியூப் மூலமாக தகவல்களை தெரிந்துகொண்டு டெல்லியில் உள்ள தனது வீட்டில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற 30 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள காஜிபூரில் வசித்த அப்துல் ரகீப் தனது கூட்டாளி பங்கஜ் என்பவருடன் சேர்ந்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நொய்டா காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் யூடியூப் மூலம் தகவல்களை தெரிந்துகொண்டு, சாதாரண கணினி பிரிண்டர் மூலமாக போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய மத்திய நொய்டாவின் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜீவ் தீட்சித், "ஒரு ரகசிய தகவலின் பேரில் சப்ராவுலா கிராமத்திற்கு அருகிலுள்ள ஜிடி சாலையில் இருந்து பாதல்பூர் காவல் நிலைய அதிகாரிகளால் குற்றவாளி கைது செய்யப்பட்டார். பிரிண்டரை பயன்படுத்தி போலி ரூபாய் தாள்களை அச்சடித்த நபரைக் கைது செய்வதில் போலீஸ் குழு வெற்றி பெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது டெல்லியின் காஜிபூர் பகுதியில் வசிக்கும் அப்துல் ரகிப் என்றும், பீகாரில் உள்ள முசாபர்பூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து

20, 50, 100 மற்றும் 200 மதிப்புள்ள ரூபாய்கள் உட்பட மொத்தம் 38,220 ரூபாய் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகளை கைப்பற்றியுள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபரான பங்கஜை கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுமார் இரண்டு மாதங்களாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் போலி நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கள் சொந்த உபயோகத்திற்காக பொருட்களை வாங்க முயன்றனர். ஆனால் டெல்லியில் உள்ளவர்கள் அந்த நோட்டுகளை வாங்கததால், அவர்கள் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் அந்த நோட்டுகளைப் பயன்படுத்த முயன்றனர்.

SCROLL FOR NEXT