அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  
தேசம்

‘ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை’; சென்னை திரும்பிய உதயநிதி உறுதி!

காமதேனு

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒடிசா சென்ற குழு இன்று மாலை சென்னை திரும்பியது. இந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா ரயில் நிலையம் அருகே நேற்று மாலை நடந்த கோரவிபத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒன்றாகும். இதனால் இந்த ரயில் விபத்தில் அதிகளவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதால், தமிழகத்தில் இருந்து தனி குழு ஒன்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் தலைமையில் ஒடிசா சென்றிருந்தது.

ரயில் விபத்து நடந்த பகுதி மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு சென்ற தமிழக குழுவினர் அங்கு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் இந்த ரயில் விபத்தினால் பயணத்தினை தொடர முடியாத தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டு, சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஒடிசாவிற்கு சென்றிருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று மாலை சென்னை திரும்பினர். தொடர்ந்து, ‘ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை’ என உதயநிதி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT