தேசம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

காமதேனு

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரிகளை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவெடுக்க தடை விதிக்கக்கோரி, தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதால், அவர் நியமிக்கப்படும் வரை கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் மனு மீது ஆணையம் இறுதி முடிவு எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஒழுங்குமுறை ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நூற்பாலைகள் சங்கம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT