கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகு
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகு 
தேசம்

எல்லை தாண்டியதாக 9 இந்திய மீனவர்கள் கைது: படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

காமதேனு

வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஒன்பது பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கலிய பெருமாள் மகன் கலையரசன் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் 20-ம் தேதி சனிக்கிழமை இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த கலையரசன், சஞ்சிகண்ணு, ஆனந்த், கமலநாதன் ராஜா, ஆகாஷ், ரீகன், பிரவீன், பாஸ்கர் ஆகிய ஒன்பது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று மதியம் அவர்கள் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே இந்திய கடல் எல்லையில் ஆழ் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களைக் கைது செய்து படகுடன் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர்.

திரிகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் ஒன்பது பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என தெரிகிறது. எல்லை தாண்டி வந்து இலங்கையின் முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்னதான் பொருளாதார பிரச்சினையால் உள்நாட்டு குழப்பங்களை சந்தித்து வந்தாலும் இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதை மட்டும் இலங்கை இன்னும் நிறுத்தியபாடில்லை. அதனைக் கண்டிக்கவும், தட்டிக் கேட்கவும் இந்திய அரசும் முன்வருவதில்லை என்பது தமிழக மீனவர்களின் வேதனையாக உள்ளது.

SCROLL FOR NEXT