தேசம்

‘படிப்பை தொடர முடியாதவர்களை கருத்தில் கொண்டே புதிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’

கி.மகாராஜன்

‘குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டு தான் புதிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வஹிதா பேகம். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் தொலைதூர கல்வி திட்ட மையத்தின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். பின்னர் திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதால், பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வஹிதா பேகம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றுள்ளது. மனுதாரர், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிப்ளமோ, எம்ஏ, எம்பில், பிஏ என்ற வரிசையில் படித்துள்ளார். 10+2+3 என்ற விகிதத்தில் படிக்கவில்லை. எம்ஏ படிப்பை திறந்த நிலை கல்வி திட்டத்தில் தான் படித்துள்ளார். இது நியமனத்திற்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவில், "அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்கும் வரையில், திறந்த நிலை பட்டங்கள் ஏற்கப்பட்டுள்ளன. திறந்த நிலை கல்வித்தகுதி தொடர்பான அரசாணைக்கு முன்பே மனுதாரர் பட்டம் பெற்றுள்ளார். திறந்த நிலை கல்வி திட்டத்தின் 4.4.2013-க்கு முன்னதாக நடந்த நியமனங்களை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை. போதுமான அடிப்படை தகுதியில்லாமல் உயர் கல்விக்கான தகுதியை எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவில் ஒருவர் தனது உயர்கல்விக்கான தகுதியை பெற நேரம், வாழ்க்கை மற்றும் பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது. கல்வித்தகுதியை நிர்ணயித்து புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. குடும்ப சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டே புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரை பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை மீண்டும் சிறப்பு அலுவலராக நியமித்து அதற்குரிய ஊதியம் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT