தேசம்

புதுப்பெண் தற்கொலை வழக்கு; கணவர் கைது: மாமியார், பாட்டி மீது பாய்ந்தது வழக்கு

காமதேனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை செய்துவந்தார். இதில் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் அருகுவிளையைச் சேர்ந்தவர் அபிராமி(22). இவருக்கும் பூதப்பாண்டி அருகில் உள்ள ஞாலம் காலணியைச் சேர்ந்த மனோஜ்(24) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அபிராமி இரண்டு மாதங்கள் கர்ப்பமாகவும் இருந்தார். இந்நிலையில் அபிராமி கடந்த ஜூலை மாதம், வீட்டில் யாரும் இல்லாத நேரம்பார்த்து மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அபிராமியின் தந்தை வினு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரில், “என் மகளின் மரணத்திற்கு அவரது கணவர் மனோஜ், மாமியார் நாகேஷ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் தான் காரணம் என கூறியிருந்ததோடு, சில ஆடியோக்களும் அனுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கமும் விசாரணை நடத்திவந்தார். இதில் மாப்பிள்ளை வீட்டில் அபிராமியை குடும்ப வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.

இதன்மூலம் விசாரணையில் தவறு நடந்திருப்பது தெரியவரவே அபிராமியின் கணவர் மனோஜ் இன்று கைது செய்யப்பட்டார். இதேபோல் மாமியார் நாகேஷ்வரி, பாட்டி கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் விரைவில் கைது செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக பூதப்பாண்டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT