தேசம்

நேரு சிலை உடைப்பு: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

காமதேனு

மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தின் உள்ள தாவரி சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த நேரு சிலை திங்கள் கிழமை காலை சேதப்படுத்தப்பட்டது. 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, கற்கள், தடிகள், சுத்தியல் மூலம் நேரு சிலையைத் தாக்கும் காட்சிகள் வைரலாகின. காவிக் கொடிகள் ஏந்தியபடி, ஆளும் பாஜக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி நேரு சிலையை அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து மிக அருகில் அமைந்திருக்கும் தாவரி சதுக்கத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக அரசை வலியுறுத்தியிருக்கிறார். நேரு சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்,

இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். சமூக அமைதியைக் குலைக்கும் விதத்தில் செயல்பட்டது, பயங்கர ஆயுதங்களுடன் பொதுவெளியில் கூடியது என்பன உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் மருந்துகள், இருமல் மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அதுகுறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே நேருவின் சிலையை உடைத்ததாகவும், கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT