தேசம்

சாதா சளி முதல் விபரீத கரோனா வரை: போராடுவதற்கான எதிர்ப்பு சக்தியை இயற்கையாக பெறுவது எப்படி?

மருத்துவர் யோ.தீபா

நம் அனைவர் மத்தியிலும் ’நோய் எதிர்ப்பு சக்தி’ என்றாலே கரோனா காலம்தான் நினைவிலாடும். பெருந்தொற்று காலத்தில் உலகமே நோய் எதிர்ப்பு சக்திக்காக இறைஞ்சியது. என்ன செய்தால், எதைத் தின்றால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் என்று அல்லாடியது. குறிப்பாக பக்க விளைவுகள் அல்லாத இயற்கை வழிமுறைகள் பலவற்றையும் பரிசீலித்தது.

கரோனா போன்ற நெருக்கடி எழும்போது மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிதவிப்பதைவிட, இயல்பாகவே உடலில் அவற்றை மேம்படுத்தச் செய்வதே சமயோசிதமாகும். தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி காய்ச்சல் தொடங்கி பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாவதை பார்க்கிறோம். இவை உட்பட குடும்பத்தில் எவருக்கும் எந்தவொரு தொற்றும் ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட்டால் நல்லது; எதை சாப்பிடாது தவிர்த்தால் நல்லது? அன்றாட வாழ்வியல் வாயிலாகவே இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அடைவது எப்படி என்பதற்கு இயற்கை மற்றும் யோக மருத்துவம் உங்களுக்கு வழிகாட்ட வருகிறது.

தூக்கம் துக்கம் போக்கும்

உடலுக்கான சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற என்ன உட்கொள்வது என்பதை பார்ப்பதற்கு முன்பு, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியை நாமாக சிதைக்காது இருப்பதும் அவசியம். உடல் தானாக தன்னை புதுப்பித்துக்கொள்ளவும், ஆற்றல் மட்டத்தை சார்ஜ் செய்துகொள்ளவும் உயிர் இயற்கையாக சில உபாயங்களை கொண்டிருக்கிறது. அவற்றை நாம் குலைக்காது இருப்பது மிகவும் முக்கியம்.

இந்த இயற்கையின் கொடைகளில் முக்கியமானது தூக்கம். அன்றாடம் 6 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்கியாக வேண்டும். அந்த தூக்கமும் முழுமையானதாக, ஆழ்ந்து அமைந்திருப்பது அவசியம். தூக்கத்துக்கு வேட்டு விழுந்தால் அது நமது உடலின் இயல்பான ஆற்றல் மட்டத்தை குறைக்கும். சோர்வாக உணரச் செய்யும். உடலில் நீர்ப்பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஆற்றல் மட்டத்தை சிதைக்கும். வெளியில் உலவும் தொற்றுகளுக்கு உடல் வாசல் திறக்க வழி செய்யும்.

ஆனால் நடைமுறையில் நாம் உரிய தூக்கம் பழகுவது இல்லை. பெயருக்கு மட்டுமே தூங்கி எழுகிறோம். உழைப்பு, பொழுதுபோக்கு இன்ன பிற காரணங்களால் தூக்கத்தை உதாசீனம் செய்கிறோம். இரவில் பணிபுரிவோரும், பறிபோன தூக்கத்தை பகலில் முறையாக ஈடு செய்வதில்லை. நமது உடலில் உறைந்துள்ள உயிர்க் கடிகாரத்தின் வழிகாட்டுதல்படி, இரவு 6 முதல் காலை 5 வரை கட்டாயம் உறங்கியாக வேண்டும். இது ஆழ்ந்த உறக்கத்துக்கான நேரம் என்பதால், சற்று முன்னதாக படுத்தால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் சாத்தியமாகும். நமது உடலின் உள்ளுறுப்புகள் ஓய்வுக்கும், புதுப்பித்துக்கொள்ளலுக்கும் இந்த இரவு உறக்கம் அவசியமாகிறது.

இரவு சரியான நேரத்துக்கு உறங்கச் செல்வதும், அதனை தொடர்ந்து பின்பற்றுவதும் உசிதமானது. உறங்கச் செல்வதற்கு முன்பாகவே மனதளவில் தயாராகிவிட வேண்டும். தூக்கத்தை பறிக்கும் அலைபேசி, தொலைக்காட்சி ஆகியவற்றிலிருந்து விடுபடுவதும் நல்லது. படுக்கையறையின் இரவு விளக்கு நீல நிறத்தில் அமைவது நல்லது. படுக்கையறை சற்று குளிர்ந்திருப்பதும் தூக்கம் வரவழைக்க உதவும். மனதை உறுத்தும் இதர பிரச்சினைகளை படுக்கையறை வாசலிலே விட்டுச் செல்வதும், மனதையும் உடலையும் இலகுவாக்கி தூக்கத்தை தானாக தருவிக்கும்.

உணவு - உடற்பயிற்சி

இரவு உணவில் மைதா கலந்த பதார்த்தங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே இவை ஒதுக்கப்ப்பட வேண்டியவை என்றபோதும், இரவு உணவில் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும்.

அடுத்தபடியாக தினத்துக்கு குறிப்பிட்ட அளவேனும் உடல் உழைப்பு அவசியம் வேண்டும். அலுவல் பணியின் பொருட்டும், பொழுதுபோக்கின் பொருட்டும் அன்றாடங்களில் சதா உட்கார்ந்தே இருக்கிறோம். இது உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். எனவே தினசரி சற்று நேரமேனும், உடற்பயிற்சிகளுக்கு ஒதுக்கியாக வேண்டும். உடற்பயிற்சிகளின் அனுகூலங்களை அறியாதவர் இல்லை. சுறுசுறுப்பான நடைபயில்வது, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், இதர உடற்பயிற்சிகள் என தங்களுக்கு வசதியானது, விருப்பமானது எவையேனும் பழக வேண்டும்.

பாக்டீரியாக்கள் வாழ்கவே!

உடலை பாதிக்கும் தொற்றுகள் என்றதுமே, பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவை கண்முன்பாக வந்து அச்சுறுத்தி செல்லும். உண்மையில் நம் உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணியிரிகளே உலகில் அதிகம். அவற்றில் கணிசமானவை நமது உடலில், குறிப்பாக குடலில் உள்ளன. அவற்றை அழிக்காதும், அவற்றின் செயல்பாட்டை உந்தும் வகையிலும் உணவூட்டம் கொள்வது நல்லது. உடலின் ஜீரண சக்தி முதல் எதிர்ப்பு சக்தி வரை பலதையும் பராமரிக்க இந்த நல்ல பாக்டீரியங்கள் உதவுகின்றன.

இந்த பாக்டீரியங்கள் கொழித்திருக்க தினசரி உணவில் மோர் முக்கியம். அந்த மோரிலும் இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவை சேர்ப்பது அவசியம். இவற்றுடன் சற்றே உப்பு சேர்த்து அரைத்தும் மோர் தயாரிக்கலாம். அரை குவளை தயிரில் ஒரு குவளை தண்ணீர் கலந்து நன்கு அடித்து பயன்படுத்தலாம். தாளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இப்படி தயாரித்த மோர் அருந்தும்போது, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அது போஷிக்கும். மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளின் ஊடுருவலுக்கு இவை தடையாகும். எதிர்ப்புசக்தி மேம்படலுக்கும் இவை உதவும். கூடுதலாக வாயுத் தொல்லை அகல உதவும்.

பழம் - காய்கறி - கீரை

உணவூட்டத்தில் பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்ப்பது நல்லது. இவை உடல் உள்ளுறுப்புகளை மேம்படுத்தி வெளியிலிருந்து வரும் தொற்றுகளை தடுப்பதற்கான நோய்எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமாவதுடன், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், நாமாக நமது உடலின் உள்ளுறுப்புகளில் அழற்சியை உருவாக்குவதை தடுக்கவும் உதவும்.

நீரிழிவு முதல் இதய நோய் வரை ஏற்கனவே பாதிப்பு கண்டவர்கள், வெளித்தொற்றுகளுக்கு எளிதில் இரையாவார்கள். இவர்கள் உணவூட்டத்தின் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கியாவதும் அவசியம். ஆளி விதை, சோம்பு இரண்டும் சேர்ந்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு உட்கொண்டால், இரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்டவை கட்டுப்பாட்டுக்கு வர உதவும். இதனுடன் 2 சிட்டிகை ஓமம் சேர்த்து உட்கொள்ளவது ஜீரண் சக்தி மேம்பட உதவும். இவற்றின் உட்பொருளாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பது இதய அடைப்புகளை தவிர்க்கவும் வழி செய்யும்.

அசைவம் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் இம்மாதிரியான உடல்பாதிப்பு கண்டவர்களும், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள விரும்புவோரும் பழம், காய்கறிகளை தவிர்க்காது உண்பது அவசியம். இன்னும் கீரைகள், பருப்புகள், கொட்டைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்வது, நோயெதிர்ப்பு வளையத்தை பலப்படுத்த உதவும். பழம், காய்கறி, கீரையில் பொதிந்திருக்கும் நோயெதிர்ப்பு உட்பொருட்கள், புற்றுநோய் வரை எதிர்த்து போராடுவதற்கான நோயெதிர்ப்பு தடுப்பை கட்டமைக்க உதவும். உணவில் நார்ச்சத்துக்கு முக்கியத்துவம் தருவதும், உடலின் நல்ல நுண்ணியிரிகளின் எண்ணிக்கையை உயர்த்த உதவும்.

நோயெதிர்ப்பு சக்திக்கான பானம் - சூப்

ஒரு குவளை நீருக்கு கால் டீஸ்பூன் மஞ்சள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள், உடன் ஒரு ஏலக்காய், ஒரு இலவங்கம், 5 கிராம் இஞ்சி, 5 கிராம் அதிமதுரம் உள்ளிட்டவற்றை இடித்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி கண்டதை இறக்குவதற்கு முன்னர் ஒரு கைப்பிடி துளசி அல்லது கற்பூரவல்லி(இரண்டுமே கிடைத்தால் மொத்தமாக ஒருகைப்பிடி) சேர்த்துக்கொள்ளலாம். இந்த நீரில் பெரியவர்களுக்கு 30 -50 மிலி, குழந்தைகளுக்கு 15-20 மிலி அருந்தச் செய்யலாம்.

இதனை தினசரி காலை அல்லது மாலை பழகுவது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக கட்டமைக்க உதவும். இந்த பானத்தில் சேர்க்கப்பட்ட உட்பொருள் ஒவ்வொன்றும் இயற்கையான நோயெதிர்ப்புக்கு உதவுபவை. சளி முதல் தீவிரமானவை வரை ஏதேனும் தொற்றுக்கு ஆளான பிறகு மருந்து மாத்திரை சிகிச்சை என்று அலைவதை விட, இம்மாதிரி இயற்கை உபாயங்களில் பலனடைவது நமது பாரம்பரிய வழிவந்தது. இந்த உட்பொருட்கள் இல்லாது நமது அன்றாட சமையல் இல்லை என்னும் அளவுக்கு பெரியவர்கள் பழக்கி வைத்திருப்பதன் நோக்கமும் இதுவே!

மாலையில் குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பியதும் சூப் தயாரித்து அருந்த பழக்குவோம். மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்தும்; கீரைகள், காய்கறிகள் மற்றும் விரும்பினால் அசைவத்திலும் எளிதில் சூப் தயாரிக்கலாம். சகலத்திலும் 2 சிட்டிகை மஞ்சள் சேர்ப்பது நமது நோக்கத்தை பயனுள்ளதாக்கும். வைட்டமின் சி அதிகமுள்ள பெருநெல்லி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றில் ஏதேனும் அன்றாட உணவூட்டத்தில் சேர்ப்பதும், நோய் எதிர்ப்பு நோக்கத்துக்கு அத்தியாவசியமானது.

காபி, டீ தவிர்க்கலாம்

எதை உட்கொள்ள வேண்டும் என்பதற்கு இணையாக எதை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. வழக்கத்திலிருக்கும் டீ, காபி போன்றவை உடலின் நீரேற்றத்துக்கு குந்தகம் செய்யும். மேலும் சந்தையில் கிடைக்கும் டீ, காபியின் உட்பொருட்களில் சுவைக்காகவும், மணத்துக்காகவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களும் நமக்கு கேடு விளைவிக்க வாய்ப்பாகும். இவற்றுக்கு பதிலாக இயற்கையான பானம் மற்றும் சூப் அருந்துவது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, மன அழுத்தம் போக்கவும் செய்து உற்சாகமான வாழ்க்கைக்கு உதவும்.

இவற்றுடன் கூடுதல் அனுகூலம் பெற, நாடிகளை சுத்திகரிக்கும் நாடி ஷோதனா பிராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி பழகலாம். இதனை தொடர்ந்து பழகும்போது உடலின் ஆக்சிஜனேற்றம் அதிகரிக்கவும், வலிகளில் இருந்தும் விடுபடவும் நாளடைவில் சாத்தியமாக்கும். ஒட்டுமொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும் உதவும்.

நல்லுணவு, நல்லுறக்கம், போதிய உடற்பயிற்சி ஆகியவை வருமுன் காப்போம் என்னும் இயற்கை வாழ்வியலுக்கு உட்பட்டவை. எனவே, ஏதேனும் பாதிப்பு கண்ட பிறகு தடுமாறுவதை விட, முன்யோசனையுடன் இவ்வாறு இயற்கையின் கரம் பற்றி நலம், வளம் பெறவும், இயற்கையை வழிபடும் பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்.

பொங்கல் நல்வாழ்த்துகள்!

(மருத்துவர் யோ.தீபா - கைநுட்பத்துறை தலைவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை)

SCROLL FOR NEXT