நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் 
தேசம்

அரசுப் பள்ளியில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியர்

கரு.முத்து

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் இணைய வழியில்  கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நாகை மாவட்ட ஆட்சியரும்,  மருத்துவருமான அருண் தம்புராஜ் வழங்கினார்.

தமிழ் உறவுகள் என்ற வாட்ஸ் அப்  குழு நடத்துகின்ற வழிகாட்டி துணைவன் மருத்துவக் குழுவின் மூலம் அரசுப் பள்ளிகளில்  தமிழ் வழியில் கல்வி பயின்று 7.5  சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு இணையவழி மூலம் மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் கலந்தாலோசனை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் மூத்த மருத்துவர்கள்,  ஓய்வு பெற்ற சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகின்றனர்.

அவ்வகையில் நேற்று மாலை நடைபெற்ற இணையவழி அமர்வில்  நாகை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் மருத்துவ மாணவர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர் "மாணவர்களின் பொன்னான நேரத்தை தகுந்த முறையில் செலவிட வேண்டும். நண்பர்களின் நட்பில் யார் எப்படி இருந்தாலும் நாம் நம் மருத்துவம் பற்றிய  கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். பாலியல் பற்றிய விழிப்புணர்வு ஆண், பெண் இருபாலரும் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல படித்தவற்றை  மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். இணையத்தில் உலாவும்போது மிகுந்த கவனம் வேண்டும். மோட்டார் வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் வேண்டும். பேசிக் கொண்டே இயக்குதல்,  இதர பழக்கங்களுக்கு உட்படுதல் ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது" என்று மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

கிராமப்புற மக்களுக்கு மருத்துவ  சேவையாற்றுவதன் அவசியம்,  மருத்துவர்கள்  எப்படிப்பட்ட பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்தும் மருத்துவ  மாணவர்களிடம்  அவர் எடுத்துரைத்தார். அதன் பின்னர் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் விடையளித்து மாணவர்களின் சந்தேகங்களை போக்கினார். 

அத்துடன்  எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் தன்னை தொடர்பு கொண்டு  பேசி தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர், அவர்களிடம் அன்புடன் தெரிவித்தார்.  மாணவர்களுக்கு இதை விட சிறந்த ஆலோசனைகள் வழங்க இயலாது. நிறைவான நிகழ்வாக இருந்தது என்று குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள்  தெரிவித்தனர்.

ஆட்சியர் அருண் தம்புராஜ், துணைவன் வழிகாட்டி மருத்துவக் குழுவின் மூத்த மருத்துவர்களான சரயு,  மகேஸ்வரி ஆகியோரின் முன்னால் மாணவர். அது   மட்டுமல்லாது இணைய வழி வகுப்புகளை எடுக்கும் இளைய மருத்துவர்களில் சிலரின் கல்லூரிக்கால நெருங்கி  நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

SCROLL FOR NEXT