தேசம்

என் கணவரை தனிமைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர்: கள்ளக்குறிச்சி வழக்கில் கைதானவர் மனைவி ஐகோர்ட்டில் புகார்

கி.மகாராஜன்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதானவரை தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் எஸ்வி பாளையத்தைச் சேர்ந்த ஆர்.உஷா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ராமலிங்கம், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ளார். கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் என் கணவரை சின்னசேலம் போலீஸார் 17.7.2022-ல் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அவரை சிறையில் பார்க்க பல முறை முயன்றும் அதிகாரிகள் விடவில்லை. காவல் நீட்டிப்புக்காக கணவரை ஆக.8-ல் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது திருச்சி சிறையில் தன்னை தனிமைச் சிறையில் அடைத்திருப்பதாக என் கணவர் தெரிவித்தார். மேலும், தன்னை சிறைக்காவலர்கள் கொடுமைப்படுத்துவதாகவும் கூறினார்.

காவல் நீட்டிப்புக்கு பிறகு மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகும் கணவரைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை. சிறையில் செல்போன் வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். சிறைக் கைதியை தனிமைச்சிறையில் அடைப்பது சட்டவிரோதம். கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். எனவே, என் கணவரை நான், உறவினர்கள், வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி வழங்கவும், தனிமைச் சிறையிலிருந்து விடுவித்து பிற கைதிகளுடன் அடைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஆக. 26-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT