தேசம்

பரபரப்பு… மின்சார ரயில் தடம் புரண்டது; போக்குவரத்து பாதிப்பு!

காமதேனு

மும்பையில் மின்சார ரயில் ரயில் புரண்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பணிமனை நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றது. பணிமனைக்குள் நுழையும் போது அந்த ரயில் திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

ரயில் தடம் புரண்டதை அடுத்து அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் விரைவு வழித்தடத்திற்கு திருப்பிவிடப்பட்டன. தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் விரைந்து வந்து, 40 நிமிட போராட்டத்துக்கு பிறகு ரயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினர்.

அதன்பிறகு ரயில் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது. ரயில் தடம் புரண்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சீரானது.

ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. ஆனாலும், விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்நிலையில், போக்குவரத்து மாற்றம் குறித்து ரயில்வே நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர்.

கடந்த சனிக்கிழமை ராய்காட் மாவட்டம் பன்வெல் - வசாய் வழித்தடத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இந்நிலையில், மின்சார ரயில் தடம் புரண்டதால், மும்பை பகுதியில் ஒரே வாரத்தில் 2 ரயில்கள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT