பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி 
தேசம்

‘பத்து ரூபா பாலாஜி’ ஆதாரம் கேட்ட அமைச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

காமதேனு

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை விலைக்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து ஆதாரம் கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, ‘பத்து ரூபா பாலாஜி’ என்ற டிரெண்டிங்கில் நெட்டிசன்கள் வறுத்து வருகின்றனர்.

தமிழக அமைச்சரவையில் சமயோசித அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுத்தடுத்து அபஸ்வரங்கள் ஒலித்து வருகின்றன. கோடைக்காலம் தொடங்கியது முதலே ஆங்காங்கே அதிகரித்த மின்வெட்டுகளால் பொதுமக்கள் எரிச்சலடைந்து வருகின்றனர். கோடையை முன்னிட்டு மின்நுகர்வு உச்சம் பெற்று வருவதாக அனுதினமும் புள்ளிவிவரங்களோடு அடுக்கி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வெட்டுப் புகார்களை அடியோடு மறுத்தும் வருகிறார். பொதுவெளியில் அப்படியான புகார் எழுப்புவோரையும், ’மின் இணைப்பு எண் கொடுங்கள்’ என்று நேரடி கேள்வியெழுப்பி வருகிறார்.

ஆனால், கள்ளச்சாராயத்தின் பெயரில் தொடங்கி மெத்தனாலில் முடிந்திருக்கும் சாராய சாவுகள், செந்தில் பாலாஜியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளன. தமிழகமெங்கும் கள்ளச்சாராய கைதுகள் மட்டுமன்றி, நல்ல(!) சாராயம் விற்கும் டாஸ்மாக் கடைகளும் பேசு பொருளாகி இருக்கின்றன. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து அண்மை பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு ஆதாரம் கேட்டார் அமைச்சர்.

உடனே பொங்கியெழுந்த சமூக ஊடகச் சமூகம், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதை ஆதாரத்துடன் பதிவிட்டு வருவதோடு, அது குறித்தான பதிவுகளை ‘பத்துரூபா_பாலாஜி’ என்ற தலைப்பில் ட்ரெண்டிங் செய்தும் வருகின்றன. கள்ளச்சாராய பலிகள் மற்றும் கைதுகள், உச்ச நீதிமன்ற வழக்கு, கோடை மின்வெட்டு ஆகியவற்றுடன் டாஸ்மாக் விற்பனை குறித்தான புகார்களும் சேர்ந்துகொண்டதில், இணையவெளியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகம் வறுபட்டு வருகிறார்.

டாஸ்மாக் விற்பனையாளர் வாக்குமூலம்
மீம்
SCROLL FOR NEXT