தேசம்

அனைத்து மணிமண்டபங்களும் இனி மக்கள் பயன்பாட்டிற்கே! : அமைச்சர் சாமிநாதன் தகவல்

காமதேனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை சீரமைக்க 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோயில் சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை நேற்று  நேரில் ஆய்வு செய்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் இதன் பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ் மொழியை இசையால் உலகெங்கும் பரப்பிய தமிழிசை மூவர்கள் மணிமண்டபம் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் மண்டபம் போதிய பராமரிப்பு செய்யப்படாததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்குச் சென்றதும் அவரின் ஆணைக்கிணங்க  உடனடியாக  40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிதி கொண்டு சீரமைப்புப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தற்போது விரிவாக ஆய்வு செய்துள்ளோம்.

தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பின் வழக்கம்போல் தமிழிசை மூவர் விழா நடைபெறும்.  மேலும் தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் அனைவரும் பயன்பெறும் விதத்தில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது" என்றார்.

அனைத்து மணிமண்டபங்கள் மற்றும் நினைவு மண்டபங்களையும்  பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதற்கேற்பவே தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் அனைத்து மணி மண்டபங்களும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும்" எனவும் அவர்  தெரிவித்தார்.

SCROLL FOR NEXT