திருச்சியில் அமைச்சர் நேரு
திருச்சியில் அமைச்சர் நேரு 
தேசம்

கனமழை பெய்து வெள்ளம் வந்தால் சென்னை என்ன ஆகும்?: அமைச்சர் நேரு பரபரப்பு பேட்டி

காமதேனு

எவ்வளவு அதிக மழை பெய்து வெள்ளம் வந்தாலும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை பாதிக்காது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மேட்டூரில் இருந்து மிக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் நீர் ஒரு லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. இதனால், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையை இன்று நடத்தியது.

இதனைத் தொடங்கி வைத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்தபடி ரூ. 935 கோடியில் எல்லா இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன.

குறித்த காலத்துக்குள் பணிகள் பூர்த்தியடையாமல் இருப்பதற்கு காரணம் மின் வயர்கள், டெலிபோன் வயர்கள், பாதாளச் சாக்கடை பைப்புகள், மெட்ரோ வாட்டர் பைப்புகள் புதைக்கப்பட்டுள்ளன. மேலும் மின் கம்பங்களும், மரங்களும் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து விட்டுத்தான் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே போக்குவரத்துக்கு சங்கடங்கள் ஏற்படும் என்பதால் சில இடங்களில் சாலையைத் துண்டிக்க முடியாத நிலை இருக்கிறது. இருப்பினும் முதலமைச்சரும், நானும் பணிகளை வேகப்படுத்த சொல்லியிருக்கிறோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் வடிகால் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மோட்டார் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

எனவே, கடந்த முறை நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த முறை வெள்ளம் பாதிக்காது. அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இதனை முன்னின்று கவனித்து வருகிறார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT