மேட்டூர் அணை
மேட்டூர் அணை 
தேசம்

காவிரியில் பாய்ந்து வரும் 1,18,671 கன அடி நீர்... நிரம்புகிறது மேட்டூர் அணை... கரையோர மக்களுக்கு அலர்ட்

காமதேனு

காவிரியில் வரும் கர்நாடகத்தின் உபரி தண்ணீரால் மேட்டூர் அணை இன்று காலை 10 மணிக்குள் முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காவிரியில் எப்போது வேண்டுமானாலும் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படலாம்.

காவிரி டெல்டா பாசனங்களுக்காக நீரை தேக்கி வைக்க பயன்படும் மேட்டூர் அணை 120 அடி நீர்மட்டம் கொண்டது. இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து 100 அடிக்கு மேல் நீர் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் இந்த ஆண்டு வழக்கமாக அணை திறக்கப்படும் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி வழக்கமான பரப்பில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த எட்டாம் தேதியன்று நூறு அடிக்கும் கீழ் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்தது. ஆனால் அப்போதிலிருந்து கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் காவிரியில் நீர்வரத்து திரும்ப அதிகரிக்கத் தொடங்கியது. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரண்டு அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அந்த அணைகளுக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

அதனால் தமிழக பகுதியில் காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. ஒகேனக்கலில் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் அருவிகள் அனைத்தும், நடைபாதை உள்ளிட்டவைகளையும் மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் செல்கிறது. தொடர்ந்து ஏழாவது நாளாக அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி தொடர்ந்து வரும் அதிக அளவு நீரால் கடந்த நான்கு தினங்களாக நாளொன்றுக்கு 5 அடி வீதம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இன்று காலை நிலவரப்படி 119.29 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,18 671 கன அடியாக உயர்ந்திருக்கிறது. அதனால் இன்று நண்பகலுக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அணையில் இருந்து 25 ஆயிரம் கன வீதம் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணை நிரம்பிய பிறகு அணைக்கு வரும் மொத்த தண்ணீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படும் என்பதால் ஆற்றங்கரை ஓரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த உபரி தண்ணீர் அனைத்தும் காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்படலாம்.

SCROLL FOR NEXT