தேசம்

மெட்ரோ ரயில் தூண் சாலையில் திடீரென இடிந்து விழுந்தது: பைக்கில் சென்ற தாய், மகன் பலி

காமதேனு

பெங்களூருவில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த தூண் திடீரென இடிந்து விழுந்ததில் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த தாய், மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நாகவரா பகுதியில் மெட்ரோ ரயிலுக்குக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை கல்யாண்நகரில் இருந்து எச்ஆர்பிஆர் லேவுட் செல்லும் சாலையில் கட்டப்பட்டு வந்த மெட்ரோ ரயில் தூண் திடீரென சாலையில் இடிந்து விழுந்தது.

அப்போது அவ்வழியே டூவீலரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட குடும்பத்தினர் மீது அந்த தூண் விழுந்து அமுக்கியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் மூவரும், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதன் பின் அவர்கள் மூவரும் அல்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேஜஸ்வி, அவரது இரண்டரை வயது மகன் விஹான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தேஜஸ்வியின் கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து கிழக்கு டிசிபி பீமாசங்கர் எஸ்.குலேத் கூறுகையில், “தங்கள் மகனுடன் தேஜஸ்வி தம்பதியினர் ஹெப்பல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். மெட்ரோ தூண் அதிக பாரம் தாளாமல் இடிந்து டூவீலர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், மகனும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார். ரயில் கட்டுமான பணியின் போது தூண் இடிந்து விழுந்து சாலையில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT