தேசம்

மதம் மாற மறுத்த இந்துப் பெண் கடத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

காமதேனு

பாகிஸ்தான் தேசத்தின் சிந்து மாகாணத்தை சேர்ந்த திருமணமான இந்துப் பெண்மணி ஒருவரை, மதம் மாற மறுத்ததற்காக சிலர் கடத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சமூக ஊடகம் வாயிலாக முறையிட்டதில், இந்த சம்பவம் இந்தியாவிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தை சேர்ந்த பெண்களை பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, மதம் மாற்ற முயற்சிப்பதாக அண்மைக் காலமாக புகார்கள் அதிகரித்துள்ளன. இந்த வரிசையில், உமர்கோட் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கும் தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாம் மதத்துக்கு மாற நீண்ட காலமாக சிலர் வற்புறுத்தி வந்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததில், மிரட்டல் பேர்வழிகள் பாலியல் அச்சுறத்தலில் இறங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இந்த மிரட்டலின் உச்சமாக அண்மையில் அந்தப் பெண்ணை கடத்திச் சென்ற 3 நபர்கள், சமரோ நகர் மறைவிடம் ஒன்றில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு தன்னை ஆளாக்கியதாகவும் அப்பெண் முறையிட்டுள்ளார்.

கடத்தல் பேர்வழிகள் மூவரும் இல்லாத தருணத்தில் அங்கிருந்து தப்பி வந்த பெண்மணி, தனக்கு இழைக்கப்பட்ட துயரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை செவிமெடுக்காததோடு, புகாரை பதியவும் காவலர்கள் மறுப்பு தெரிவித்தனராம். இதனையடுத்து நடந்த அக்கிரமங்களை சமூக ஊடகங்களில் அப்பெண் பதிவிடவே, உள்ளூர் இந்துமதத் தலைவர்கள் உட்பட பலரிடம் இருந்தும் ஆதரவுக்கரங்கள் நீண்டுள்ளன.

இப்ராஹிம் மங்ரியோ, புனோ மங்கிரியோ மற்றும் பெயர் தெரியாத இன்னொரு ஆண் என மூவருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் அலட்சியம் செய்ததாக அப்பகுதியின் இந்து மத நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சிந்து மாகாணத்தின் தார், உமர்கோட், கைராப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் மதம் மாற மறுக்கும் இந்துப் பெண்களை பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவது தற்போது அதிகரித்து வருகிறது.

கடந்த டிசம்பரில், சிஞ்சோரோ நகரில் 40 வயதாகும் இந்துப் பெண் ஒருவர், இந்த வகையில் கொடூரமான படுகொலைக்க்கு ஆளானார். மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு அவர் கொலையானது சிந்து மாகாணத்தை உலுக்கி உள்ளது. இதே போன்று கடந்த ஜூன் மாதம், கரீனா குமாரி என்ற இந்துப் பெண், தான் கடத்தப்பட்டு வற்புறுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாற்றி, வயதான நபருக்கு கட்டாயத் திருமணம் செய்விக்கப்பட்டதாக நீதிமன்ற வழக்கு ஒன்றின் விசாரணையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT