தேசம்

மகாராஷ்டிராவை கலக்கிய மாவோயிஸ்ட் தர்மபுரியில் பதுங்கல்: அதிகாலையில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

காமதேனு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மகாராஷ்டிர மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், களிரோலி மாவட்டம் தர்மராஜா அடுத்த பங்கரபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டா என்கிற சீனிவாசமுல்லா கவுடு (23). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவரான இவர் மீது அம்மாநிலத்தில் உள்ள தர்மராஜா காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரைக் கைது செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் தமிழகம் வந்த மகாராஷ்டிரா காவல்துறையினர், செல்போன் எண் சிக்னலை வைத்து அவர் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி மாருதி நகரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதை நேற்று இரவு உறுதிப்படுத்தினர். இதையடுத்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸாருக்கு மகாராஷ்டிர காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்று அதிகாலை போலீஸார் சிவக்குமார் வீட்டை சுற்றி வளைத்துப் பிடித்தனர். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீனிவாச முல்லாகவுடு மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தருமபுரியில் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT