தேசம்

மணிப்பூரில் பயங்கர நிலச்சரிவு...பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 50 பேரை காணவில்லை

காமதேனு

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை இரவு துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள 107 - பிராந்திய இராணுவ முகாமில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த மீட்புப்பணியில் ஏழு இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பொதுமக்கள் உட்பட எட்டுப்பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

நிலச்சரிவு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் பைரன் சிங், "புதன்கிழமை இரவு அந்த இடத்தில் மொத்தம் 81 பேர் இருந்தனர், குறைந்தது 55 பேரைக் காணவில்லை.இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். 2-3 நாட்களுக்குள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முடிக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். மண் மிகவும் மென்மையாக இருப்பதால் மீட்புப்பணிகளுக்கான வாகனங்களை இயக்குவதில் சிரமம் உள்ளது " என்று கூறினார்.

மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தவிர இந்திய ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவமும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. புல்டோசர்கள் மற்றும் பிற மீட்பு சாதனங்கள் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இடிபாடுகளில் பணியாளர்கள் யாரும் புதைந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய ஒரு அதிநவீன ரேடார் விமானம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 13 பிராந்திய இராணுவ வீரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT