எழுத்தாளர் கோணங்கி
எழுத்தாளர் கோணங்கி எழுத்தாளர் கோணங்கி மீது ஆண் நாடகக்கலைஞர் பாலியல் குற்றச்சாட்டு: என்ன நடக்கிறது இலக்கிய உலகில்?
தேசம்

எழுத்தாளர் கோணங்கி மீது ஆண் நாடகக்கலைஞர் பாலியல் குற்றச்சாட்டு: என்ன நடக்கிறது இலக்கிய உலகில்?

கவிதா குமார்

தமிழின் பிரபல எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று நாடகக்கலைஞர் கார்த்திக் ராமச்சந்திரன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதை தொடர்ந்து இலக்கிய உலகின் பேசு பொருளாக இப்பிரச்சினை மாறியுள்ளது.

தமிழ் இலக்கிய உலகில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர் கோணங்கி . கோவில்பட்டியில் பிறந்த இவர் 'மதினிமார்கள் கதை', 'கொல்லனின் ஆறு பெண் மக்கள்', 'பொம்மைகள் உடைபடும் நகரம்', 'பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமம்', 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி' உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இதுபோல 'பாழி', 'பிதிரா','த', 'நீர்வளரி' ஆகிய நாவல்களையும் கோணங்கி எழுதியுள்ளார்.

எழுத்தாளர் கோணங்கி

இந்த நிலையில் நாடகக்கலைஞர் கார்த்திக் ராமச்சந்திரன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோணங்கி தன்னிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அதில், எழுத்தாளர் கோணங்கி, தன்னிடம் 2013-ம் ஆண்டு தவறாக நடந்துகொண்டார் என்றும். தன்னை போல் பல இளம் நாடகக் கலைஞர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பாக பதிவிட்டிருந்தார். அத்துடன் கோணங்கியின சகோதரர் முருகபூபதியும் தனது சகோதரரின் செயல்பாடுகளைக் கண்டுகொள்ளாமல், பாலியல் வன்முறைக்கு துணைபோகிறார் என்றும் கார்த்திக் ராமச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.

தமுஎகச வெளியிட்ட கண்டன அறிக்கை

இந்த பாலியல் குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய உலகில் அதிர்வை ஏற்படுததியது. கோணங்கியின் செயலுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலர் தங்களது கண்டனத்தை ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மணல்மகுடி நாடகக்குழுவில் இயங்கிவந்த கலைஞர்களில் சிலர், தாங்கள் எழுத்தாளர் கோணங்கியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள கோணங்கிக்கும், மணல்மகுடியின் பொறுப்பாளர் முருகபூபதிக்கும் தமுஎகச தனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இக்குற்றச்சாட்டுகளுக்கு இவர்களிருவரும் உரிய விளக்கத்தைத் தரவேண்டும். பாதிப்பிற்கு ஆளாகியுள்ள கலைஞர்கள் தமக்கு நீதிவேண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமுஎகச உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன்.

இந்த நிலையில் தமிழின் முன்னணி எழுத்தாளரான ஜெயமோகன் கோணங்கிக்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். கோணங்கியின் பாலியல் குற்றத்திற்கு ஜெயமோகன் எப்படி ஆதரவு கரம் நீட்டலாம்என அவரது ஆதரவாளர்களும் பலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

கோணங்கியின் சகோதரர் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன்.

இந்த நிலையில், கோணங்கியின் சகோதரரும், பிரபல எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் ஃபேஸ்புக்கில், "மற்றவர்கள் போல கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு நான் சும்மா இருக்க முடியாது. எத்தனையோ எழுத்தாளர்களும் கலைஞர்களும் தோழமையுடன் வந்து கூடும் இடமாக எங்கள் வீடு இருந்துள்ளது. அது தொடர வேண்டும் என விரும்புகிறேன். அரவிந்த் சிவா உள்ளிட்டு யாருமே முன்பே என்னிடம் பேசவில்லை. தெரிந்திருந்தால் முன்பே தலையிட்டிருக்கலாம். பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு என்ன ஆறுதல் தர முடியும் என்று தெரியவில்லை. மணல்மகுடியின் வெள்ளிவிழா நேரத்தில் இக்குற்றச்சாட்டுகள் என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீண்டெழுவது எப்படி என்றும் தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை எழுத்தாளர் கோணங்கி மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஒரு இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் மறுக்கிறேன்; நிராகரிக்கிறேன். என்மீது திட்டமிட்டே அவதூறுகளைப் பரப்புகிறார்கள். கார்த்திக் தம்பியின் கவிதை, கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகளை 'கல்குதிரை'யில் வெளியிட்டு, அவரை நான்தான் வளர்த்தெடுத்தேன். தொடர்ந்து எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதால்தான் மொழிபெயர்ப்புக் கதைகளை அவரால் எழுத முடிந்தது. இப்போதும், அவருக்கான மொழிபெயர்ப்புப் பணிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இப்படி புகார் சொல்லும் கார்த்திக் தம்பியே, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளார். புகழ்ந்துவிட்டு இப்போது இப்படி எழுதுவது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது.

அவரும் என்மீது புகார் கூறியுள்ள மற்றவர்களும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். 'மணல் மகுடி' நாடகக்குழு ஓரிரு மாதங்களில் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இந்தியா முழுவதுமிருந்து கலைஞர்கள் வரவிருக்கிறார்கள். இதனைக் கெடுக்கும் நோக்கத்தில்தான் அவதூறுகளைப் பரப்பி மணல் மகுடியையும், என்னையும் அழிக்க நினைக்கிறார்கள். எழுத்தில் மட்டுமே பிரதானமாக இயங்கிக்கொண்டிருக்கும் எனக்கு, இந்தக் குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கடந்த இரண்டு நாள்களாக வேதனையில் இருக்கிறேன். இதற்காக, கார்த்திக் தம்பிமீது எந்த வருத்தமும் கோபமும் இல்லை. 'வளர்த்த கிடா மார்பில் பாயும்' என்பார்கள். அப்படித்தான், மார்பில் குத்தப்பட்டுள்ளேன். இதிலிருந்து விடுபட கட்டாயம் நாள்கள் எடுக்கும். காலவெளியில் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார். புகாருக்குள்ளானவர் மறுப்பைத் தெரிவித்துள்ளார். இத்துடன் இப்பிரச்சினை முடியுமா என்று தெரியவில்லை.

SCROLL FOR NEXT