தேசம்

கோலாகலமாகத் தொடங்கிய நவராத்திரி விழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

காமதேனு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து பக்தர்கள் கோயிலுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்கியதை அடுத்து திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் ஒரு மணி வரையிலும்,  மாலை 4 மணி முதல் 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், வீணை கச்சேரி, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு எனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  விழாவை முன்னிட்டு கொலு சாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்பும் பக்தர்கள், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மனுக்கு இன்று ராஜராஜேஸ்வரி அலங்காரமும், நாளை கோலாட்ட அலங்காரமும், நாளை மறுநாள் மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 29-ம் தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ம் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும் , அக்டோபர் முதல் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், இரண்டாம் தேதி தண்ணீர்ப் பந்தல் அலங்காரமும், மூன்றாம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், நான்காம் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நவராத்திரி உற்சவம் தொடங்கும் நிலையில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனை, கல்ப பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT