தேசம்

யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீதான மோசடி வழக்கு விசாரணைக்குத் தடை விதித்த உயர்நீதிமன்றம்!

காமதேனு

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பெயரில் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள அருள்மிகு மதுர காளி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் அரவிந்தன். இவர், சென்னை ஆவடி காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் சென்னை முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவர் மீது மோசடி புகார் அளித்திருந்தார். அதில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அருள்மிகு மதுர காளி அம்மன் திருக்கோயிலின் உப கோயில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதற்காக, இந்து அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டியுள்ளதாக கார்த்திக் கோபிநாத் மீது புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மே 30-ம் தேதி கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப் போராட்டம் நடத்தி அவரை பாஜக மீட்கும்” எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில் தன்மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவர் மீது பதியப்பட்ட வழக்கிற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில், “கார்த்தி கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்கள் கேட்டுள்ளோம். இன்னும் கிடைக்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யூடியூபர் கார்த்தி கோபிநாத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

SCROLL FOR NEXT