தேசம்

தேர்தல் நடத்தலாம், முடிவை வெளியிடக் கூடாது: தென்னிந்திய திருச்சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காமதேனு

தென்னிந்திய திருச்சபை தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என்று தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக  உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபையின் ஆயர் மன்றத்தின் (சினாட் கவுன்சிலின்) உறுப்பினர்களாக இருப்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த சுனில்தாஸ், ஜெயராஜ். இவர்கள் உள்பட மேலும் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், " தென்னிந்திய திருச்சபை என்பது பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த திருச்சபையின் தலைமை பேராயராக கேரளாவைச் சேர்ந்த தர்மராஜ் ரசாலம் பதவி வகித்து வருகிறார்.

தென்னிந்திய திருச்சபைக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் உள்ளன. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நூறு சதவீதம் அரசு உதவி பெறும் சுமார் 2 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை  இந்த திருச்சபைதான் நிர்வாகம் செய்கிறது.

தலைமை பேராயர் தர்மராஜ் ரசாலத்தின் மீது முறைகேடு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது. அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இவருக்கு வருகிற ஜூன் மாதம் 67 வயது பூர்த்தியாகிறது. தலைமை பேராயர் பதவி காலமும் 67 வயது வரைதான். அதன்பின்னர் அவர் ஓய்வு பெறவேண்டும். அதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஆனால், இவரை தொடர்ந்து இப்பதவியில் நீட்டிக்க வைப்பதற்காக, ஓய்வு வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தி, சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளனர். எனவே, தலைமை பேராயர் வயது வரம்பை 70-ஆக உயர்த்தி நடைபெறும் தேர்தலுக்கும், துணை தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கும் தடைவிதிக்க வேண்டும். திருச்சபையை நிர்வகிக்கவும், அதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கவும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.தங்கசிவன் ஆஜராகி  வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், " தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஜனவரி 13-ம் தேதி  நடைபெறும் தேர்தலுக்கு தடைவிதிக்க விரும்பவில்லை.

அதேநேரம், கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். தேர்தல் நடவடிக்கை அனைத்தையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து, அடுத்த முறை அவற்றை தாக்கல் செய்ய வேண்டும். சிஎஸ்ஐ விதிகளின்படி ஓட்டுச்சீட்டு முறைப்படி தேர்தலை நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. 

தற்போதுள்ள நிர்வாகிகளே மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை பதவியில் தொடரலாம். இந்த வழக்குகள்  வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைக்கப் படுகிறது.  அப்போது எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று   தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT