அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்  
தேசம்

நீட் தேர்வு விலக்கிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

காமதேனு

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் நீட் விலக்கிற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "12 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வானப் பகுதியாக உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மாதக்கணக்கில் நீர் தேங்கி நிற்கிறது. வகுப்பறைகள், ஆய்வகம், கல்லூரி கட்டிடங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு மாணவர்கள் ஆய்வகத்தில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இக்கல்லூரிக் கட்டிடத்தை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று ஆய்வு செய்ய வந்துள்ளேன். மேலும், இங்கு ரூ. 60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப்பணிகள் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவக் கழகத்தின் ஆணையாளரை அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் நீட் குறித்து எழுப்பிய கேள்விக்கு, "தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளது, அதற்கு அரசு பதிலும் அளித்துள்ளது. அதன் பின் குடியரசுத் தலைவர் நீட் விலக்கிற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம்" என்று பதிலளித்தார்.

SCROLL FOR NEXT