புயல்
புயல் வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்; கரைத் திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை
தேசம்

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்; கரைத் திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை

காமதேனு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறக் கூடும் என்பதால் ஆழ் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைத்திரும்ப வேண்டுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுத் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, திங்கள் கிழமை புயலாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் 9-ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT