தேசம்

நவம்பர் 9-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

காமதேனு

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 8-ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் வடமேற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும். வங்க கடலின் மத்திய பகுதியில் மற்றும் அதனை ஒட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும். இதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT