தேசம்

மாணவிக்கு போனில் லவ் டார்ச்சர்: உதவி பேராசிரியர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு

காமதேனு

வெளிநாட்டில் படித்து வரும் மாணவியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இவர், சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு 3 மாத பயிற்சிக்காக வந்தார். அப்போது அங்கு உதவி பேராசிரியராக பணிபுரிந்த ராஜ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மாணவி பயிற்சி முடிந்து மீண்டும் வெளிநாடு சென்ற நிலையில் உதவி பேராசிரியர் ராஜ்குமார் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் ராஜ்குமார் , சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரைத் தொடர்புகொண்டு, பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பியதற்காக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் , உதவி பேராசிரியர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மதுரவாயல் போலீஸார், உதவி பேராசியர் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT