மதுரை அருகே நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்த பெரியம்மாவிற்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது உச்சப்பட்டி. இந்த ஊரை சேர்ந்த பவுன்ராஜ். இவரது மகள் ராஜலட்சுமி(21). தனியார் மில்லில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2016-ல் மாட்டு தொழுவத்திற்கு சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இது தொடர்பாகா ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பவுன்ராஜ் வீட்டின் அருகே வைக்கோல் படப்பில் கிடந்த சாக்கு மூடை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்த நிலையில் அந்த சாக்கு மூட்டையினை சோதனையிட்ட போது அதில் அழுகிய நிலையில் பெண் உடல் இருந்துள்ளது. அந்த உடல் காணாமல் போன ராஜலட்சுமியின் உடல் என போலீஸார் உறுதிப்படுத்தினர்.
போலீஸாரின் தொடர் விசாரணையில், ராஜலட்சுமி சம்பவத்தன்று தனது பெரியம்மா சாந்தி என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சாந்தியிடம் நடந்த விசாரணையில் ராஜலட்சுமி அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவரை தனது வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்தததை சாந்தி ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் கொலை செய்த உடலை வீட்டில் வைத்திருந்த நிலையில் துர்நாற்றம் வீசியதால் தன்னுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரின் உதவியுடன் ராஜலட்சுமியின் உடலை சாக்கில் கட்டி வைக்கோல் படப்பு அருகே போட்டுவிட்டு வெளியூர் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், சாந்திக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும், கொலையை மறைக்க உதவிய சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.