தேசம்

`மகளை சமாதானப்படுத்தினோம்; அதற்குள் இப்படி நடந்துவிட்டது'- கோவில்பட்டி மாணவி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

காமதேனு

கோவில்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார். இம்மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை பகுதியில் முத்துக்கருப்பன் என்னும் பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகள் வைத்தீஸ்வரி(17) என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பிளஸ் டூ படித்துவந்தார். இவர் பள்ளிக் கழிவறையில் நேற்று இரவு திடீரென சென்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பசுவந்தனை போலீஸார் மாணவி வைத்தீஸ்வரி உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரியின் சித்தி கடந்தவாரம் உயிர் இழந்தார். அந்த துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பியவர் அதன் பின்னர் சோகமாக, யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். அதன்பின்பு சக மாணவிகளிடம் பேசும்போதும் மனம் உடைந்து காணப்பட்ட வைத்தீஸ்வரி, உடல்நலமின்மையாலும் தவித்திருக்கிறார். இதெல்லாம் சேர்ந்து ஏற்படுத்திய மனஉளைச்சலில் அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் வைத்தீஸ்வரியின் குடும்பத்தினர் இதை மறுத்திருப்பதோடு, உடலை வாங்க மறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாணவி வைத்தீஸ்வரியின் குடும்பத்தினர் கூறுகையில், “வைத்தீஸ்வரியின் மரணம் குறித்து பள்ளிநிர்வாகம் தெளிவானத் தகவலைக் கொடுக்கவில்லை. அதனால் உடலை வாங்கமாட்டோம். நேற்று இரவில் இருந்து, தற்போதுவரை வைத்தீஸ்வரியின் உடலை எங்களுக்குக் காட்டவில்லை. காவல்துறையினர் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்க முயற்சிக்கின்றனர். வைத்தீஸ்வரியின் மரணத்தின் உண்மைநிலை சொல்லப்பட்ட பின்பே கையெழுத்திடுவோம். உடற்கூராய்வு செய்ய சம்மதிப்போம். சில மாதங்களுக்கு முன்பு வைத்தீஸ்வரி தன் வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து தன்னைத் திட்டுவதாகச் சொன்னார். நாங்கள் தான் இது பிளஸ் டூதானே? அடுத்து கல்லூரிக்குச் சென்றுவிடுவாய் என சமாதானம் சொன்னோம். அதற்குள் இப்படி நடந்துவிட்டது” என்றார்.

SCROLL FOR NEXT