தேசம்

ஆணுறை விற்பனைக்குத் தடையா? கொந்தளித்த மாநிலம்; அதிகாரிகள் மழுப்பல்!

காமதேனு

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஆணுறை விற்பனை தடை செய்யப்படுவதாக கர்நாடக மாநிலத்தில் எழுந்த களேபரத்தை அடுத்து, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் உரிய விளக்கத்தை அளித்து வருகின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம், பெங்களூரு பள்ளிகள் சிலவற்றில் மாணவ மாணவிகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருந்தது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு தரப்பிலும் இருந்து கலவையான ஆட்சேபக் குரல்கள் எழுந்தன.

இந்தியாவின் வளர்ந்த நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் மேற்கத்திய தாக்கம் சற்று அதிகம். அங்கத்திய பள்ளி மாணவ மாணவியருக்கு பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலான அநேக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பாஜக ஆளும் கர்நாடகாவில் பாலியல் கல்வி புறந்தள்ளப்பட்டு, நன்னெறிக் கல்வி மற்றும் பிரார்த்தனை வகுப்புகள் வாயிலாகவே பள்ளி மாணவர்களை வழிப்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே இணைய வசதியுடனான செல்ஃபோன் உபயோகமே, மாணவ சமுதாயத்தை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மத்தியில் செல்ஃபோன் உபயோகத்தை தடை செய்யவும், அவ்வப்போது அவர்களை சோதனை செய்யவும் முடிவானது. மாநிலத்தின் ’ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாக வாரியங்களின் சங்கம்’ சார்பாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க முடிவானது. இந்த வகையில் ஒரே நேரத்தில் ஏராளமான பள்ளிகளில், கடந்த நவம்பர் மாதம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிக்கிய செல்ஃபோன்களுக்கு அப்பாலும், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிகெரெட் பாக்கெட்டுகள், லைட்டர் ஆகியவற்றோடு பல மாணவ மாணவிகளின் பையில் ஆணுறை பாக்கெட்டுகளும், கருத்தடை மாத்திரைகளும் பிடிபட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவப் பருவத்தினருக்கான பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் குரல்கள் மீண்டும் வலுத்தன. அவற்றை செவிமெடுக்காத அரசு, புதிய உபாயங்களில் மாணவர்கள் மத்தியிலான பாலியல் தணிக்கையை செயல்படுத்த முயன்றது.

அவற்றில் ஒன்றாக, மாநிலத்தின் மருந்தகங்களில் 18 வயதுக்கு குறைவானோருக்கு ஆணுறை விற்பனையை தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. பாலியல் கல்வியை போதிக்க முன்வராதவர்கள், ஆணுறை கிடைக்கச் செய்யாததன் மூலம் மாணவ சமூகத்தை பால்வினை நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கிய கேடுகளுக்கு தள்ளுவதாக குற்றம்சாட்டுகள் எழுந்தன. ஆணுறை விற்பனைத் தடைக்கு எதிராக மருத்துவர்கள், உளவியலாளர்கள், கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்புக் குரலில் இணைந்தனர்.

எதிர்ப்பு அதிகமானதை அடுத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதிய விளக்கத்தை தந்துள்ளனர். அதன்படி, 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஆணுறை விற்பனை அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆனால் அப்படி ’ஆணுறை கோரும் மைனர் வயதினருக்கு உரிய கவுன்சிலிங்கை மருந்தகங்கள் வழங்க வேண்டும்’ என்றும் புதிய ஏற்பாட்டை விளக்கியுள்ளனர். இதுவும், மாணவர்கள் ஆணுறை வாங்கச் செல்வதை தடுக்கும் முயற்சி என்பதோடு, கவுன்சிலிங் வழங்குவதில் முறையான பயிற்சி பெறாத மருந்தாளுனர்களை இதில் ஈடுபடுத்துவதற்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.

மருந்தகங்களில் கவுன்சிலிங் என்பதற்கு பதில் முழுமையான மற்றும் முறையான பாலியல் கல்வி போதிப்பே உரிய தீர்வு என்றும் வலியுறுத்தல்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து மாணவப் பருவத்தினருக்கான கருத்தடை உபகரணங்கள் விற்பனை குறித்து விளக்கமான வலிகாட்டுதல் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமுறை இடைவெளியில் மாணவ சமுதாயத்தினரின் தடம் புரண்ட போக்கும், அவற்றை தடுமாற்றத்துடன் எதிர்கொள்ளும் அரசும் தொடர்ந்து அங்கே விவாதங்களுக்கு ஆளாகி வருகின்றன.

SCROLL FOR NEXT