பகவந்த் மான்
பகவந்த் மான் 
தேசம்

மதியம் 2 மணிக்குள் பணிக்கு வரவில்லை என்றால் சஸ்பெண்ட்: அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை

காமதேனு

மாநில விஜிலென்ஸ் பிரிவால் லூதியானாவில் பிசிஎஸ் அதிகாரி நரீந்தர் சிங் தலிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை தொடங்கி அதிகாரிகள் ஐந்து நாள் பொது விடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநில அரசுப் பணியாளர்கள் தங்கள் சக ஊழியரை சட்ட விரோதமாக கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக எச்சரித்துள்ள முதல்வர் பகவந்த் மான், மதியம் 2 மணிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பகவந்த் மான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "வேலைநிறுத்தம் என்ற போர்வையில் சில அதிகாரிகள் பணிக்கு வரவில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த அரசாங்கம் ஊழலை சகித்துக் கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்கட்டும். இதுபோன்ற வேலைநிறுத்தம் மிரட்டல் விடுப்பதற்கு சமம். பொறுப்புள்ள எந்த அரசாங்கத்தாலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது

எனவே, வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்க உங்களுக்கு இதன்மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணிக்குள் அதாவது 11.01.2023 மதியம் 2 மணிக்குள் பணியில் சேராத அனைத்து அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்" என எச்சரித்துள்ளார்.

முன்னதாக, லூதியானாவில் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரியாக இருந்த தலிவால், வாகனங்கள் சட்டவிதிகளை மீறுவதற்கான சலான்களைத் தவிர்ப்பதற்காக வாகன உரிமையாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விஜிலென்ஸ் பீரோவால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். “பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரி சட்ட விரோதமாகவும், தவறாகவும், தன்னிச்சையாகவும், உரிய நடைமுறையும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.

SCROLL FOR NEXT