ஜவாஹிருல்லா எம்எல்ஏ  ஆடு, மீன், கோழிக்கடைகளுக்கு அனுமதி; மாட்டிறைச்சி கடைகள் அகற்றம்: ஜவாஹிருல்லா கண்டனம்
தேசம்

ஆடு, மீன், கோழிக்கடைகளுக்கு அனுமதி; மாட்டிறைச்சி கடைகள் அகற்றம்: ஜவாஹிருல்லா கண்டனம்

காமதேனு

ஈரோடு அருகே மாட்டு இறைச்சிக் கடைகள் இடிக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளனர். திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் 22.11.2022 அன்று புல்டோசர் கொண்டு அனைத்துக் கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். 

கடை நடத்தியவர்கள் தொடர்ச்சியாக நிர்வாகத்தை அணுகி மீண்டும் தொழில் செய்ய கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. அங்கே கோழி, ஆடு மீன், இறைச்சி கடைகள் எல்லாம் செயல்பட்டு வரும் நிலையில் மாட்டிறைச்சி கடை மட்டும் அகற்றப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது.

புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை 26 ஏக்கர் பரப்பளவு  கொண்டது என தெரிகிறது. இவற்றில் மாட்டுக்கறி கடை மட்டும் அகற்றப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.  தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நல்லாட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மீண்டும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகமும் மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT