தேசம்

போராட்டத்தைக் கலைக்க தண்ணீரை பீய்ச்சியடித்த போலீஸ்: ஷாம்பூ போட்டுக் குளித்த மாணவர்கள்

காமதேனு

மாணவர் போராட்டத்தை கலைக்க தண்ணீர் பீய்ச்சியடித்த போலீஸாருக்கு பதிலடியாக, அந்த தண்ணீரை அருவியாக பாவித்து ஷாம்பூ போட்டு குளித்த மாணவர்களின் சேட்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, தேசிய பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினர்.

அவர்களை கலைப்பதற்காக காவல்துறை, தண்ணீர் பீரங்கி வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தியது. ஆனபோதும் மாணவர்கள் திரளாக போராட்டத்தில் இறங்க, வேறு வழியின்றி தண்ணீர் பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட போலீஸ் முயன்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த மாணவர்களில் பலர் கலைந்து ஓடினர். ஆனால், போன வேகத்தில் திரும்பி வந்தனர்.

தலையில் ஷாம்பூ தேய்த்திருந்தவர்கள் அடுத்த சுற்று தண்ணீர் பீய்ச்சலுக்கு உற்சாகமாக தலைமுழுகி ஷாம்பூ ஸ்நானம் செய்தனர். அவர்களில் சிலர் குளிருக்கு ஈடுகொடுக்க குளித்தபடி குத்தாட்டமும் போட்டனர். மாணவர்களின் விசித்திர போராட்டத்தை காவல்துறையினரும் மென்மையாகவே கையாண்டனர். முன்னதாக அதிபர் எதிர்ப்பில் இறங்கிய மாணவர்கள் போலீஸார் வளைத்தபோது, சாணம் கரைத்த நீரை போலீஸார் மீது தெளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நாடு தழுவிய மக்கள் போராட்டம் ஓய்ந்துள்ள சூழலில், மாணவர்களின் சாதாரண எதிர்ப்பு போராட்டம் எந்த கட்டத்திலும் பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது என்பதால், போலீஸாரின் நடவடிக்கைகளில் மென் போக்கே யாழ்ப்பாணத்தில் நீடித்தது. பொங்கலை முன்னிட்டு வைரலான தமிழர்களின் பதிவுகளில் இந்த யாழ் பல்கலை மாணவர்களின் ஷாம்பூ குளியலும் அதிகம் பகிரப்பட்டது.

SCROLL FOR NEXT