தாய் இந்திராணி - மகள் ஷீனா போரா
தாய் இந்திராணி - மகள் ஷீனா போரா 
தேசம்

‘கொலையான மகள் உயிரோடு உலவுகிறாள்?’

எஸ்.எஸ்.லெனின்

மகள் ஷீனாபோராவை கொன்றதான வழக்கில் தற்போது ஜாமீனில் இருக்கும் இந்திராணி, ஷீனா போரா சாகவில்லை என்றொரு தாக்கீதை சிபிஐ நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கிறார். சிறப்பு நீதிமன்றமும் அவரது மனுவை பரிசீலித்து காட்சி ஆவணங்களுக்காக காத்திருக்கிறது. நாட்டை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் மகளைக் கொன்ற தாய் கிளப்பியிருக்கும் புதிய பூதம், திசை திருப்பலா அல்லது புதிய பரபரப்பா என்ற எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ளது.

இந்திராணியின் கணவர்கள்

மகள் ஷீனா போரா வழக்கில் நுழைவதற்கு, தாய் இந்திராணியின் பின்னணி அறிவது அவசியம். இந்திராணிக்கு அடுத்தடுத்து 3 கணவர்கள். முதல் கணவர் சித்தார்த்தாவுக்கும் இந்திராணிக்கும் பிறந்த 2 வாரிசுகளில் ஒருவர் மகள் ஷீனா போரா. இந்திராணியின் பெற்றோர் வளர்ப்பிலிருந்த ஷீனா போராவை வெளியுலகத்தில் தனது தங்கையாகவே அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

சித்தார்த்தாவுக்கு அடுத்தபடியாக சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார் இந்திராணி. இந்த இருவருக்கும் ஒரு மகன் உண்டு. பின்னர் இவரையும் விவாகரத்து செய்துவிட்டு ஊடக அதிபர் பீட்டர் முகர்ஜியை மணந்து இந்திராணி முகர்ஜியானார். பீட்டருக்கு அவரது மனைவி வாயிலாக ராகுல் முகர்ஜி என்ற மகன் ஏற்கனவே உண்டு.

இந்திராணி வாழ்க்கை

ஒரு தாய் பேயானாள்

பீட்டர் குடும்பத்துக்கும் மகள் ஷீனா போராவை தனது தங்கை என்றே அறிமுகம் செய்திருந்தார் இந்திராணி. இந்த சூழலில் ஷீனாவுக்கும், ராகுல் முகர்ஜிக்கும் எங்கோ எப்படியோ காதல் பற்றிக்கொண்டது. கணவரின் மகனுக்கும் தனது மகளுக்கும் இடையிலான காதலை மெல்லவோ விழுங்கவோ முடியாது தவித்தார் இந்திராணி. ராகுல் முகர்ஜியுடனான காதலை கைவிடுமாறு ஷீனா போராவை மிரட்டிப்பார்த்தார். வெகுண்ட ஷீனா போரா, இந்திராணியின் தனிப்பட்ட ரகசியங்களை பீட்டரிடம் சொல்லப்போவதாக பதிலுக்கு மிரட்டினார். தாய் அங்கே பேயாக மாறினார்.

2012 ஏப்ரலில், மும்பை ராஜ்காட் பகுதியில் காரில் வைத்து, தனது கார் ஓட்டுநர் மற்றும் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து ஷீனாவை கழுத்தை நெறித்துக் கொன்று, சடலத்தை எரித்தார். ஷீனாவை தேடி விசாரித்த ராகுலிடம், அவள் அமெரிக்கா சென்று விட்டதாக இந்திராணி சாதித்தார். ஷீனாவின் பாஸ்போர்ட் ராகுல் கையில் இருந்ததை இந்திராணி கவனிக்கவில்லை. ஷீனா பாஸ்போர்ட் உடன் ராகுல் போலீஸாரிடம் புகாரளித்தார். ஆனால் இந்திராணியின் பெரிய இடத்து தொடர்புகள் காரணமாக, அவரை போலீஸாரால் நெருக்க முடியவில்லை.

இந்திராணி கைதும் ஜாமீனும்

ஷீனா கொல்லப்பட்டு 3 வருடங்களுக்குப் பின்னர், இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம், வேறொரு வழக்கில் போலீஸிடம் சிக்கியபோது, ஷீனா போரா கொலை விவகாரத்தை போதையில் உளறியதில் வெளிப்பட்டது. இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ், கார் ஓட்டுநர் ஷ்யாம், மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் கைதானார்கள்.

2019-ல் பீட்டர், இந்திராணியை விவாகரத்து செய்ததுடன், அடுத்த ஆண்டே ஜாமீனில் வெளியே வந்தார். சஞ்சீவ் கண்ணா தனது உடல் உபாதைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டு ஜாமீன் கோரி வருகிறார். சிறையில் அடைபட்டிருக்கும் இந்திராணி, ஆறரை வருட சட்ட போராட்டத்தின் பின்னர் கடந்த மே மாதம் ஜாமீன் பெற்றார்.

விமான நிலையத்தில் ஷீனா போரா?

சிறையில் இருந்தது முதலே ஷீனா போரா உயிரோடு இருப்பதாக தெரிவித்து வரும் இந்திராணி, தற்போது அதே கோணத்தில் தனது தரப்பை இன்னும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இந்திராணி மீதான வழக்கின் அடிப்படையை தகர்க்கும் வகையில் இது இருப்பதால், சிபிஐ தரப்பு இந்திராணி முன்வைக்கும் தகவல்களை நிராகரித்து வருகிறது.

புதிய பூதமாக, அஸாம் மாநிலம் குவஹாத்தி விமான நிலையத்தில் ஹீனா போராவை நேராக பார்த்ததாக வழக்கறிஞர் சவினா பேடி சச்சார் என்பவரது தரப்பு மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஷீனா போரா சமர்பித்திருக்கிறார். இந்த சவினா பேடி, இந்திராணி மட்டுமன்றி ஷீனா போராவையும் நன்கறிந்தவர்.

வழக்கறிஞர் தரப்பு கூற்றை ஆச்சரியமாக சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்கத் தயாரானது. மேலும், ‘ஷீனா போரா உருவத்திலான நபர் குறித்து ஆராய்வதற்காக சிசிடிவி பதிவுகளை சமர்பிக்குமாறு குவஹாத்தி விமான நிலைய நிர்வாகத்துக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த சிசிடிவி பதிவுகள் பிப்ரவரி 2 அன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட இருக்கின்றன. இந்திராணி வழக்கை திசை திருப்ப முயல்கிறாரா அல்லது அவர் கூற்றில் உண்மை இருக்கிறதா என்பது அந்த பதிவுகளின் அடிப்படையில் தெளிவாகும்.

SCROLL FOR NEXT