தேசம்

சென்னையில் தங்கப் போகும் விக்ராந்த் போர்க் கப்பல்: காரணம் இதுதான்!

காமதேனு

விசாகப்பட்டினத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 ஆண்டுகள் வரை நிலை நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான விமானம் தாங்கிப் போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை, பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தக் கப்பலானது 23,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. ரஷ்யாவின் உதவியுடன் உருவான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கிப் போர்க் கப்பலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டாவது கப்பல் இது. இந்தியக் கடற்படைக்கு இந்தக் கப்பல் மேலும் வலிமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு கப்பல் உருவாக்கப்பட்டதில்லை எனும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகியிருக்கும் இந்தக் கப்பலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இரண்டு கால்பந்து மைதானங்களுக்கு இணையான பரப்பளவு கொண்ட பரந்த கப்பல் இது. இந்திய வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து கிக்-29கே போர் விமானங்கள், கமோவ் -31 ஹெலிகாப்டர்கள், எம்எஹெச்-60ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். இந்த கப்பலில் விசாகப்பட்டினத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 ஆண்டுகள் வரை நிலைநிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலை நிறுத்துவதற்காக இந்தியக் கடற்படை கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் போதிய உட்கட்டமைப்பு வசதி ஏற்படும் வரை சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 8 ஆண்டுகள் வரை ஐஎன்எஸ் விக்ராந்த் நிலை நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT